Monday, September 26, 2016

நியாயத்தின் சுவை.

நியாயத்தின் சுவை:
முதியோர் உதவித்தொகையில் ஊடுருவிய லஞ்சம் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதனை தட்டி கேட்டதால் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையும் எழுதியிருந்தேன். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல. நேர்மையாயிருக்கும் சாதாரண அடிமட்ட ஊழியர்களும் கூடத் தங்கள் பணிக் காலத்தில் பல சோதனைகளையும் வேதனைகளையும், இழப்புகளையும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எனக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டன. இதோ இன்னொரு சம்பவம்.


அப்போது ஊனமுற்றோர் நலத்துறை சமூக நலத்துறையில்தான் இருந்தது. அதன் ஒரு பிரிவில் நான் புதிதாக பணியேற்றிருந்தேன். அன்று ஒரு தபால் புதிதாக வந்திருந்தது. அதற்குரிய கோப்பினைத் தேடி எடுத்து முழு கோப்பையும் படித்துப் பார்த்தேன். மதுரையில் ஊனமுற்றோருக்கான அரசு மருத்துவ மனையில் "பிளாஸ்டர் டெக்னிஷியன்" என்று ஒரு பதவி அதற்கு தகுதியான ஆள் இல்லை என்பதால் நீண்ட காலமாக நிரப்பப் படாமல் இருந்தது. ஒரு நபர் அப்பதவியை "லெதர் டெக்னிஷியன்" என பெயர் மாற்றி தன்னை அப்பணிக்கு தகுதியான நபராகக் கருதி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் அளித்திருந்தார். லெதர் டெக்னிஷியன் பதவிக்கு தன்னிடம் அனைத்து தகுதிகளும் இருப்பதற்கான சான்றிதழ்களையும் அளித்திருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. அவருக்கு சிபாரிசு செய்திருந்தார். அந்த கோப்பு இரண்டு மூன்றாண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி சுற்றிக் கொண்டிருந்து விட்டு அப்படியே தொடர் நடவடிக்கையின்றி ஆகியிருந்தது. அந்த மனுதாரர் மீண்டும் ஒரு நினைவூட்டு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் பெயரை ரவி என்று வைத்துக் கொள்வோம். (கற்பனைப் பெயர்தான்)


நான் ரவியின் கோரிக்கையை அரசு ஒப்புதலைப் பெற அரசுக்கு அனுப்பலாம், அரசு ஒப்புதல் அளித்தால் அந்த நபருக்கு பணி நியமன ஆணை வழங்கலாம் என்று நோட் எழுதி இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பினேன். இயக்குனர் என்னை அழைத்து சில சந்தேகங்களைக் கேட்டு விட்டு அரசுக்கு கருத்துரு அனுப்ப ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார்.  அடுத்த நாளே இது தொடர்பான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைத்தேன்.


ஒன்றரை வருடம் அரசு மீண்டும் மீண்டும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது. அதற்கு நாங்களும் பதில் அனுப்பிக் கொண்டிருந்தோம். ரவி, மாதாமாதம் "என்ன ஆச்சு மேடம் என் ஃ பைல் என்று கேட்டு நாயாக பேயாக மதுரைக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தார் . கிட்டத்தட்ட பதினெட்டு மாதத்திற்குப் பின்னர் அரசு ஒரு ஆணையிட்டது, நான் மிகுந்த மகிழிச்சியோடு அதைப் படித்துப் பார்த்தால்...........என் முகம் சற்றே ஒளியிழந்து போனது.


ரவியின் கோரிக்கையின் பேரில்தான் பிளாஸ்டர் டெக்னிஷியன் என்ற அந்தப் பதவியை லெதர் டெக்னிஷியன் என்று பெயர் மாற்ற அரசு ஒப்புதல் அளித்திருந்தது என்றாலும் அதில் ஒரு ஆப்பு வைத்திருந்தது. ரவியை நேரிடையாக அப்பணியில் நியமனம் செய்ய இயலாது என்றும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக மட்டுமே அப்பதவிக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நான் என்ன செய்ய முடியும்? உடனே வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு இந்த அரசாணையின் நகலினை இணைத்து தகுந்த ஆட்களின் விவரத்தை அனுப்பக் கோரி கடிதம் அனுப்பினேன். ரவி நேரில் வந்து கேட்ட போது விஷயத்தை அவரிடம் கூறினேன். அவர் முகம் பாவம் சோர்ந்து போயிற்று. இந்த ஆணைக்காக அவர் ஐந்து ஆண்டுகளாக நாயாக அலைந்தும் கூட அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்தான் ஆளெடுக்க வேண்டும் என்று சொல்லியதில் அவருக்கு நிறைய ஏமாற்றம். இருந்தாலும் மனம் தளராமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவரும் விண்ணப்பிப்பதாகக் கூறிச் சென்றார்.


வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதி உள்ளதாக இருபது நபர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது. அதில் ரவியின் பெயரும் இருந்தது. எல்லோருக்கும் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் வைத்து ஒரு பிராக்டிகல் தேர்வு நடத்த நாள் குறிப்பிட்டு அனைவருக்கும் தபால் அனுப்பினோம்.


தேர்வு நாளன்று என் உயரதிகாரியுடன் நானும், என் கண்காணிப்பாளரும் தேர்வு நடந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். போலியோ பாதித்த நபர்கள் அணியும் வகையில் ஒரு லெதர் ஷூவை உருவாக்க வேண்டும் என்பதுதான் தேர்வு. அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வந்திருந்த போட்டியாளர்களுக்கு வழங்கப் பட்டது. அதற்குரிய கால அவகாசமும் வழங்கப் பட்டது.


தேர்வு நடக்கும் போதே அரசியல்வாதிகளிடமிருந்து சிபாரிசுக் கடிதங்கள் சில வந்தன. நானும் எங்கள் உதவி இயக்குனரும் அந்த கடிதங்களை சட்டையே செய்யவில்லை. வாங்கி கோப்பில் வைத்துக் கொண்டோம் அவ்வளவே.


ஒரு வழியாய் தேர்வு நேரம் முடிந்தது. ஒவ்வொரு டேபிள் அருகிலும் நாங்கள் சென்றோம். நம்புங்கள் இருபது பேரில் ஒருவர் மட்டுமே முழு வடிவத்தில் மிக அழகாக ஷூ செய்து முடித்திருந்தார், அந்த ஒருவர் வேறு யாருமல்ல ரவிதான். பலருக்கு கத்திரிக்கோலை வைத்து லெதரை கட் பண்ணக் கூடத் தெரியவில்லை. ஒரு சிலர் ஷூ என்ற பெயரில் ஒரு கிண்ணத்தை செய்திருந்தார்கள். நானும் என் உதவி இயக்குனரும் மிகவும் மகிழ்ச்சியோடு ரவி மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றதாக குறிப்பு எழுதி அனைவரது மதிப்பெண்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எங்கள் இயக்குனரிடம் ரவிக்கு நியமன ஆணை வழங்கலாம் என்று நோட் எழுதி கோப்பினை சமர்ப்பித்தேன் நான்.


மறுநாள் காலை இயக்குனர் என்னை அழைத்தார். ஏதோ ஒரு பெயரை என்னிடம் துண்டுச் சீட்டில் கொடுத்து இந்த ஆளுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் எழுதி கொண்டு வாங்க என்றார். நான் அதிர்ந்தேன். சார் ரவிக்குதானே....என்று தயங்கியபடி கேட்டேன்.

"நான் சொன்னதைச் செய்ங்க இது சபாநாயகர் சிபாரிசு. நம்மால ஒண்ணும் செய்ய முடியாது" அவர் கடுமையாகக் கூறினார். நான் கோபத்தை அடக்கிக் கொண்டு கீழே வந்தேன். என் உதவி இயக்குனரிடம் பொருமித் தள்ளினேன்.

"இது நியாயமே இல்ல சார். அஞ்சு வருஷமா இதுக்காக ஒருவர் அலையோ அலைன்னு அலைந்திருக்கார். தேர்வுலயும் தன்னை தகுதியனவன்தான்னு அந்த ரவி நிரூபிச்சிருக்கார். அப்டியிருக்க கத்திரிக்கோல் கூடப் பிடிக்கத் தெரியாத ஒருத்தருக்கு இந்த போஸ்ட்டைக் கொடுக்கச் சொல்றது நியாயமே இல்ல சார். பாவம் அந்தப் பையன்"

"நாம என்ன செய்ய முடியும் உஷா மேடம். மேல இருக்கறவங்க சொன்னதை செய்ய வேண்டியதுதான் நம்ம வேலை. போங்க போய் proceeding ரெடி பண்ணுங்க" என்றார் அவர்.

"என்னால முடியாது சார். என் மனசாட்சி குத்தறது. என் கையால இந்த பாவத்தை செய்ய மாட்டேன். எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. அவங்க நல்லார்க்கணும்னு நினைக்கறேன். நா இப்பவே, இன்னி தேதிலேர்ந்தே மெடிகல் லீவுல போறேன். என் கையால தவறான ஒரு நபருக்கு பணி நியமன ஆணை எழுதி வைக்க மாட்டேன். நீங்க யாரை வேணா வெச்சு ஆர்டர் எழுதிக்கோங்க அல்லது நீங்களே கூட எழுதிக்கோங்க" நான் கோப்பினை அவர் டேபிளில் வைத்து விட்டு என் கண்காணிப்பாளரிடமும் விஷயத்தை சொல்லி விட்டுக் கிளம்பினேன். என் கண்காணிப்பாளருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். அவருமே இயக்குனரின் இந்த வாய்மொழி உத்தரவில் நொந்து போயிருந்தார். என்னைத் தடுக்கவில்லை. ரவியைப் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தபடி அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த நேரம் எந்த தேவதை ததாஸ்து சொல்லியதோ, என் எதிரில் ரவி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் என் முகம் மலர்ந்தது. ஆர்டர் ரெடியாய்டுமா மேடம்? அதை வாங்கிட்டே போயடலாம்னுதான் இன்னும் ஊருக்குப் போகாம காத்திருக்கேன் என்றார்.


நான் அவரை பரிதாபமாகப் பார்த்து விட்டு டீக்கடை பக்கமாய் அழைத்துச் சென்றேன். சாரி ரவி இங்க என்னென்னமோ நடக்குது. மேலிட சிபாரிசு விளையாடுது. வேற யாருக்கோ போஸ்டிங் போட்டு ஆர்டர் ரெடி பண்ணச் சொல்றாங்க. நீங்க உடனே போய் யார் மூலமாவது ஆர்டரை வாங்கப் பாருங்க. உங்க எம்.எல்.ஏக்கு தகவல் சொல்லுங்க. அவர் ஏதாவது உதவி செய்வாரான்னு கேளுங்க. நீங்க பண்ணின மாடல் ஷூவைக் கூட டெஸ்ட்ராய் பண்ணிடுவாங்க போலருக்கு. அது ஒண்ணுதான் உங்க திறமைக்குச் சான்று. அதை அழிக்க விடாம பாத்துக்கோங்க. முடிஞ்சா ஏதாவது பத்திரிகைக்கு கூடப் போங்க. நா சொல்றதை சொல்லிட்டேன். இனி உங்க சாமர்த்தியம். நியாயம் பெறப் போராடுங்க. உங்களுக்காகத்தான் நா விடுப்புல போறேன். நா உங்ககிட்ட பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம்." நான் ரவியின் காதில் விஷயத்தைப் போட்டு விட்டுக் கிளம்பி வீடு வந்தேன். அன்றிரவு முழுக்க தெய்வத்திடம் ரவிக்கு நியமன ஆணை கிடைக்க பிரார்த்தித்தேன்.


மறுநாளே பத்து நாள் மருத்துவ விடுப்பு கோரி தபாலில் கடிதம் அனுப்பினேன். சரியாக ஏழாவது நாள் காலை என் கண்காணிப்பாளரிடமிருந்து போன். உடனே ஆபீஸ்க்கு வாங்க உஷா என்றார்.

என்ன விஷயம்?

நீங்க வாங்க. ரொம்ப அர்ஜென்ட் ஏ.டி கூப்பிடச் சொன்னார் என்று சொல்லி கட் பண்ணி விட்டார்.

என்னவென்று புரியாமல் அரைமணியில் கிளம்பி அலுவலகம் வந்தேன். எங்கள் துணை இயக்குனர் என்னைப் பார்த்து சிரித்தார். "எதுக்கு சார் வரச் சொன்னீங்க. என் லீவு இன்னும் முடியலையே".

"வாங்க வாங்க போய் உங்க கையால புரொஸீடிங்ஸ் எழுதுங்க என்று அந்த கோப்பை நீட்டினார்.

நான்தான் முடியாதுன்னு சொன்னேன் இல்ல சார்?

அட நீங்க ஜெயிச்சுட்டீங்க மேடம். நாம எல்லாரும் விரும்பியபடி ரவிக்குதான் நியமன ஆணை வழங்கப் போறோம். அதான் உங்க கையாலேயே ஆணையை எழுத உங்களை வரச்சொன்னேன் என்று அவர் சிரிக்க, அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமும் சந்தோஷமும் அளவிடமுடியாதது. நான் அன்றே விடுப்பை முடித்துக் கொண்டேன். முதலில் ரவிக்கு பணி நியமன உத்தரவு தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பினேன்.

சரியாக ஒரு மாதம் கழித்து ரவி மதுரையிலிருந்து எங்கள் ஆபீசுக்கு வந்தார். . மேடம் நீங்க மட்டும் அன்னிக்கு சொல்லாம இருந்திருந்தா என்னால எதுவும் செய்திருக்க முடியாது. உங்களுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னு தெரியல என்றபடி என்னிடம் ஒரு அட்டைப்பெட்டியை நீட்டினார்.

என்னப்பா இது?

இனிப்புதான் மேடம். என்று சொல்லி சிரித்தார்.

அப்டியா ஒண்ணு செய்ங்க. நீங்களே உங்க கையால இங்க எல்லார்க்கும் குடித்துடுங்க என்றேன். அவர் அட்டை பெட்டி பிரித்து என்னிடம் நீட்ட அதிலிருந்து ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக் கொண்டேன். உண்மையிலேயே அந்த இனிப்பு அமிர்தமாய் உள்ளே இறங்கியது. நியாயம் வென்றதன் சுவை அது.

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நியாயமாகக் கிடைக்க வேண்டியதைக்கூட போராடித்தான் பெற வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள், மேடம்.

எனினும் இந்தச் சம்பவத்தின் முடிவு, இனிப்பு சாப்பிட்டதுபோல இனிப்பாகவே உள்ளது, வாசகனாகிய எனக்கும்கூட.

பகிர்வுக்கு நன்றிகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி சார்