Thursday, May 31, 2012

எழுத்து சித்தர்.


எண்பதுகளின்  மத்தியில் `அமுதசுரபி' மாத இதழில் எனது "அடைப்பு" என்ற சிறுகதை பரிசு பெற்றிருந்தது.  பரிசளிப்பு விழா ஸ்ரீராம் நிறுவனத்தால் மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடத்தப் பட்டது.  அதில் புதினம், கட்டுரைகள் என்று பல்வேறு தளத்தில் பரிசுகள் வழங்கப்பட இருந்தது.  புதினத்திற்காக பரிசு வாங்கியது திரு பாலகுமாரன்.  ஒரே மேடையில் அவரோடு நானும்  மேடையில் அமர்த்தப் பட்ட போது  ஒருவினாடி அது கனவா நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது எனக்கு.


பரிசளிப்பு விழா முடிந்து வெளியில் அவர் தன் குடும்பத்தாருடன் நின்று பேசிக்கொண்டிருக்க, என கணவர் என்னையும் அழைத்துக் கொண்டு நேராக அவரருகில் சென்றார்.  என மனைவி உங்கள் தீவீர வாசகி என்று என்னை அறிமுகப்படுத்த,  அவர் என்னை ஏறிட்டு பார்த்தார்.  "நீ சிறுகதைக்காக பரிசு வாங்கினாய் அல்லவா?" என்றார்.  ஆமாம் என்றேன்.
தன் மனைவிகளை எனக்கு அறிமுகப் படுத்தினார்.  பிறகு முடிந்தால் நீ வீட்டுக்கு வாயேன், நாம் நிறைய பேசுவோம் என்றார். என் கணவரிடம். விலாசமும் சொன்னார். வரும் முன் போன் பண்ணி விட்டு வா என்றார்.


அடுத்து வந்த விடுமுறை நாளில் போன் பண்ணி விட்டு கிளம்பினேன்.
என் கணவர் அவர் வீட்டின் காம்பசில் விட்டு விட்டு நீ போய் பேசி விட்டு வா.  நான் சற்று பொறுத்து வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.  கமலாவும் சாந்தாவும் புன்னகையோடு என்னை வரவேற்று அமர வைக்க,  சற்று பொறுத்து வந்தார் பாலா.  கூரை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.    மெர்க்குரிப் பூக்களில் துவங்கி அதுவரை அவர் எழுதியிருந்தவை  அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எழுத்துலகில் பிரவேசித்திருந்த எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.


 மூன்று மணி நேரப் பொழுது மூன்று நிமிடம் போல் கரைந்திருந்தது.  நான் விடை பெற்று கிளம்பினேன்.  எப்படி போவாய்.?  இது அவர் கேள்வி.
என்னவர் காத்திருப்பார் - இது என் பதில்.  அவர் கண்கள் விரிந்தது. அவர் வந்திருக்கிறாரா?  சொல்லவே இல்லையே,. என்ன பெண் நீ.  அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்றார்.   இவ்வளவு நேரம் அவரால் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது.  என்றேன்.  நீளவாக்கில் செல்லும் காம்பவுண்டு அது. என்னோடு துணைக்கு வந்தார்.  கேட் அருகில் நின்றிருந்தார் என்னவர்.   ச்சே என்ன மாதிரி ஒரு ஆம்படையான் உனக்கு!   இப்டி ஒருத்தனை நா பார்த்ததே இல்லை என்று நெகிழ்ந்தார் என் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு.


அன்று துவங்கியது எங்கள் நட்பு.   ஒரு நாள்  காலை அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார்.  ஒரு பக்கம் சமையல், குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பும் படலம், ஜன்னல் திட்டில் கிடைக்கும் கேப்பில் நான் எழுதிக்க் கொண்டிருந்த கதை பேப்பர்கள்,  என்று அமர்க்க்களமாக இருந்தது,   குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் வரை பொறுமையாய் காத்திருந்தார்.  பிறகு அரைமணி நேரம்  தான் அடுத்து எழுதப் போகும் நாவல் குறித்து பேசி விட்டு கிளம்பினார்.

என் வீட்டு விசேஷங்களுக்கு நான் அவரை அழைப்பதும்,  அவர் வீட்டு விசேஷங்களுக்கு அவர் எங்களை அழைப்பதும் வாடிக்கையாயிற்று.  ஆரம்பத்தில் இருந்த பயமெல்லாம் போய்  இலக்கிய தர்க்கம் அதிகரித்தது. சிலநேரம் அது சண்டை போல் தோன்றும் மற்றவர்களுக்கு,  என் கதையில் நான் காப்பி தம்ளர்கள்  நிறைய அலம்புகிறேன் என்று கிண்டல் செய்வார்.  கோபமாக வரும்.  பிறகு என் கதையை படித்து பார்த்த போது அது உண்மைதான் என்று தோன்றியது.   மாற்றிக் கொண்டேன்.  பாலகுமாரன் கிண்டல் செய்யாத அளவுக்கு வெகு ஜாக்கிரதையாக எழுத ஆரம்பித்தேன்.


நட்பு என்பது வெறும் காப்பி சாப்பிட்டு விட்டு பேசி விட்டுப் போவது மட்டுமல்ல என்பதை அவர் பல முறை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்.
ஒருசமயம் என் அக்காவுக்கு நான் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.   என்னிடம் பணமில்லை.   நகையை ஏதாவது வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக வந்தார் பாலா.  என் முகத்தை பார்த்து விட்டு ஏதாவது பிரச்சனையா என்றார்.  ஒனறும்  இல்லை என்றேன்   முகத்தை பார்த்தா அப்டி தெரியலையே. . என்ன சுப்ரமணியம் நீங்கதான் சொல்றது என்றதும் வேறு வழியின்றி பணத்தேவை குறித்து சொன்னோம்.   அவ்ளோதானே எங்கிட்ட கேட்டா நா தர மாட்டேனா என்றார்.   எங்களுக்கு கடன் வாங்கி பழக்கமே இல்லை என்றார் என் கணவர்.   எனக்கும் உங்களுக்கும் நடூல எதுக்கு அவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் என்றவர் உடனே கிளம்பினார் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு. 


அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கவரில் பணத்தோடு வந்தார்.  இந்தா. இதை நான் எப்போ திருப்பி கேட்கிறேனோ அப்போது கொடுத்தால போதும் என்றார்.   இல்லை என் புராவிடன்ட் பண்டு லோன் போட்டு பத்து நாள்ல குடுத்துடறேன் என்றார் என் கணவர்.  அதேபோல் பணத்தை திருப்பி கொடுத்த போது, வேற ஏதாவது கடன் இருந்தா இதை வைத்து அதை அடை.  எனக்கு வேண்டும் என்கிற போது நானே கேட்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.   வேறு கடன் எதுவும் இல்லாத நிலையில் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு விட்டு வந்தார் என் கணவர்.  ஆறு மாதம் கழித்து பணம் குறித்து நான் நினைவு படுத்த, சரி சுமையா இருந்தா கொடுத்து விடு என்று சொல்லி வாங்கிச் சென்றார்.


மற்றொரு முறை சமூக நலத்துறைக்கு துறை மாற்றம் செய்யப்பட்ட எனக்கு சமூக நலத்துறையில் பணியிடம் வழங்கவேயில்லை.  லீவுல இருக்கயா நீ  என்றார் என்னிடம். நான் விஷயத்தைச் சொன்னேன். உங்க துறைக்கு யார் செயலர் என்றார். நான் சொன்னேன்.  அட இவரா. எனக்கு நல்லா தெரியுமே. அவரைப் போய்ப் பார்க்கலாம் நாளைக்கு என்றார்.  அவரே அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் போனில் பேசி நேரம் வாங்கி, மறுநாள் என்னை அழைத்துச் சென்றார். ஆறுமாதம் நான் அலையாய் அலைந்தபோதும் நடக்காத விஷயம் அரைமணியில் மேஜிக் மாதிரி நடந்தது,   அடுத்த நாள் நான் பணியில் சேர்ந்தேன்.  இப்படி சின்னதும் பெரிதுமாக கேட்டும் கேட்காமலும் செய்த உதவிகள் கணக்கற்றவை.


எனது முதல் நாவல் பதிப்பகம் மூலம் புத்தக வடிவில் வெளி வந்தது அவர் தயவால்தான். அந்தப் புத்தகத்திற்கு அவரே முன்னுரையும் எழுதிக் கொடுத்தார்.  அவருடைய மிகச் சிறந்த சில புத்தகங்களுக்கு என்னை முன்னுரை எழுதவைத்ததார். முன்னுரை என்பது எப்படி எழுதப் பட வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.


இதையெல்லாம் விட மிகப் பெரிய உதவியை ஒரு நண்பராக எனக்கு செய்திருக்கிறார். என் கணவருக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. கழுத்து வழியே மூளைக்கு செல்லும் தமனியில் கொழுப்பு அடைத்துக் கொண்டதால் பக்கவாதம் வந்திருந்தது.   மிக சிக்கலான அறுவை சிகிச்சை.  அறுவை சிகிச்சை நடக்கும்போதே ஸ்ட்ரோக் ஏற்பட நிறைய வாய்ப்பு இருந்தது.   அப்படி ஏற்பட்டால்   பிழைப்பதே கஷ்டம்தான்.

தமிழ்நாடு மருத்துவமனையில் என் கணவரோடு நான் மட்டுமே இருந்தேன்.  அதிகாலை அவரை அறுவை சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் சென்றதும், இனி உன்னை நல்ல படியாய் பார்ப்பேனா மாட்டேனா என்கிற பயமும் பதற்றமுமாய் நான் மட்டும் தனியே வெளியில் அமர்ந்திருந்த நிலையில் என் தோளைத் தொட்டது ஒரு கரம. திரும்பினால் பாலா.   என் கண்கள் உடைந்தது.    அவர் எதுவும் பேசாமல் என்னருகில் அமர்ந்தார்.  கிட்டத்தட்ட நான்கு மணிநேரம்.   இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.   சிலையாய் அமர்ந்திருந்தோம்.   டாக்டர் வெளியில் வர நான் எழுந்து ஓடினேன்.  டாக்டர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.   போஸ்ட் ஆபரேஷன் அறையில் இருக்கிறார். போய்ப் பாருங்கள் என்றார். நானும் பாலாவும் உள்ளே போனோம். டாக்டர் என்னைக் காட்டி யார் தெரிகிறதா என்றார்.  தெரிகிறது என்றார்.  பாலாவைக் காட்டி இது யார் சொல்லுங்கள் என்றார்.   பா   லா ...மிக மெலிதாக சொன்னதும் பாலகுமாரனின் கண்களில் கண்ணீர்.       பிறகு என் கணவர் டிஸ்சார்ஜ் ஆன போது,   அவரை தன் காரில் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டதும் அவர்தான்.


அங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பியவர் நேராக என் வீட்டிற்கு சென்று என் அம்மாவிடம் சற்று கோபமாகவே பேசி இருக்கிறார். இப்டி அவளை தனியா விட்ருக்கப் படாது நீங்க.   ஏதோ ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா  தாங்கிப் பிடிச்சுக்கக் கூட யாருமில்லாம தன்னந்தனியா அவ உட்கார்ந்திருந்தது  வயத்தைக் கலக்கிடுத்து.  உங்களால முடியலைன்னா எங்கிட்ட சொல்லியிருந்தா நா சாந்தா கமலா ரெண்டு போரையும் அனுப்பி இருப்பேனே.  என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்.  பாவம் என் அம்மா  என் குழந்தைகளுக்கு காவலாய் தான் வீட்டிலிருந்ததை சொல்லி இருக்கிறாள்.


எப்படியோ காப்பாற்றியும் கூட என் கணவருக்கு தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை.   மறுபடியும் புகைப் பழக்கம் தொற்றிக் கொள்ள ஒரு நாள் அது அவரை முழுவதுமாய் எரித்து விட்டது.
பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த பாலா என் பெண்ணிடம் என் கணவரின் புகைப் படத்தை வாங்கிக் கொண்டு சென்று பத்திரிகைகளுக்கு செய்தி சொன்ன கையேடு அந்த படத்தை பெரிதாக்கி லாமினேட்டும் செய்து கொடுத்தார்.  அந்தப் படம் இன்று வரை பீரோவில்தான் இருக்கிறது. வெறும் புகைப்படமாய் என்னவரை பார்க்க எனக்கு விருப்பமில்லாததுதான்   வெளியில் வைக்காத காரணம்.


அதற்கு பிறகு பால குமாரன் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. நான் போன்  செய்து பேசி ஏம்ப்பா அப்பறம் இங்க வரவில்ல என்றபோது அவர் சொன்ன பதில்.   சுப்பிரமணியம் இல்லாத வீட்டுக்கு வர எனக்கு கஷ்டமார்க்கு. பிடிக்கல. உனக்கு தோணும போது நீ என் வீட்டுக்கு வந்து பேசிட்டு போ.  - இதுதான்.  


அதன் பிறகு இன்று வரை அவர் என் வீட்டுக்கு வரவில்லை,. வந்தாலும் வாசலோடு பேசி விட்டுப் போவார்.  நாளாக ஆக  நாங்கள் பேசிக்கொள்வது கூட குறைந்து போயிற்று. சிலநேரம் அது வருடக் கணக்கில் கூட இருக்கும்.  ஆனால் எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம். சண்டையிட்டுக் கொள்வோம்.  கிண்டலடித்துக் கொள்வோம்.   பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு  என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.


எதற்கு திடீரென்று பாலாவைப பற்றி எழுதுகிறேன் என்று தோன்றும்.  இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்.   எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே அவர் புகைப்பதை நிறுத்தி விட்டாலும், எப்போதோ புகைத்ததன் பாதிப்பு இன்று அவரது நுரையீரலில் கோளாறை ஏற்படுத்தி இருக்கிறது     

வீட்டிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜன் சிலிண்டரோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்.   எது என் கணவரை என்னிடமிருந்து பறித்துச் சென்றதோ, எது என் நண்பரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறதோ, அதை இனியாவது இந்த உலகம் தூக்கி எறிய வேண்டும். என்ற தவிப்பில்தான் இன்று இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.  நீங்கள் புகைப்பவர் ஆனாலும் சரி, அல்லது புகைக்க விரும்புகிறவர் ஆனாலும் சரி, உங்களுக்கு நாள் சொல்ல விரும்புவது,

"உங்கள் உதட்டில் உட்காரும் அந்த சிறு நெருப்பு ஒரு நாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு  அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்பதே"





  


Thursday, April 5, 2012

தையல்காரர்

அந்த வரிசை மிக நீண்டிருந்தது. ஏன் எதற்கு இப்படி வரிசையில் நின்றிருக்கிறார்கள் என்று புரியவில்லை. பிறந்த குழந்தைகளோடு கூட சிலர் நின்றிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. ஒரு சிலரது முகம் மட்டும் சற்றே வாடியிருந்தது.

என்ன வரிசை இது? நான் ஒரு இளைஞனிடம் கேட்டேன். முன்னால் போய்ப் பாரும்.

நான் போனேன். அங்கே ஒரு மிகப் பெரிய வாசல். அதன் முகப்பில் ஒரு பெரிய பலகை. அதில் ``இவ்விடம் உங்கள் பழைய சட்டையைக் கொடுத்து புதிய சட்டை வாங்கிச் செல்லுங்கள். என்று எழுதியிருந்தது. ஆஹா மிக்சி கிரைண்டர், டிவி க்கு தான் இப்படி ஒரு சலுகை கிடைக்கும். சட்டைக்குமா? சரிதான் நாமும் வாங்கி விட வேண்டியதுதான். நான் வரிசையில் நிற்கும் எண்ணத்தோடு மெல்ல நடந்தேன்.

வயது வித்தியாசமின்றி எல்லோரும் வரிசையில் புது சட்டைக்காக நின்றிருந்தது வியப்பாயிருந்தது.

``ஏங்க பெரியவரே என்ன வயசு உங்களுக்கு?

யாருக்குத் தெரியும்? எனக்கு ஆறு புள்ளைங்க பொறந்த பொறவுதான் நாட்டுக்கு சொதந்தரம் கெடச்சுது.

``இந்த வயசுல புது சட்டை போட ஆசையா?

``ஏன்? எவனோ தருமராசன் கொடுக்கறான். உனக்கென்ன போச்சுதாம்?

நான் யாரந்த தருமராசன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அவன் தன் கையில் அளவெடுக்கும் நாடா ஒன்று வைத்திருந்தான். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கொடுப்பதை ஒரு சிரிப்போடு கொடுத்தால்தான் என்ன என்று கேட்கத் தோன்றியது. அதற்கு மேலிருந்தான் அவனது உதவியாளன். வரிசையின் ஒழுங்கை கவனித்துக் கொண்டிருந்தான் அவன். நீ பின்னால போ, நீ முன்னால வா, நீ இன்னும் பின்னால போ என்று தன் விருப்பத்திற்கு வரிசையை மாற்றிக் கொண்டிருந்தான்.

ஏங்க தையல்காரரே உங்க ஆள் என்ன இப்டி செய்யறார்? ஒரு நியாயம் வேண்டாம்? “ பின்னால் விரட்டப் பட்ட யாரோ ஒரு முதியவர் கத்தினார். வயசானவன்னு ஒரு இரக்கம் வேணாம்?

தையல்காரர் காது கொடுத்தாற்போல் தெரியவில்லை.

வேறென்ன? சின்ன பசங்க கிட்ட லஞ்சம வாங்கியிருப்பான். அதான் நைசா முன்னாடி தள்ளி விட்டுட்டான்.

அவன் எந்த புலம்பலுக்கும் விடை பகரவில்லை.

தையல்காரர் அளவு நாடாவை சுழற்றி அடுத்த ஆளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றார்.

இத்தனை பேருக்கும் இவரிடம் புது சட்டை இருக்குமா?. சும்மா சொல்கிறாரோ?

``ஏங்க ஒரு ஆள் கூட புது சட்டையோடு வெளிய வரக காணுமே.

``இது உள்ள போற வழி தம்பி. புது சட்டை வாங்கிட்ட பெறகு வேற வழியா வெளிய போவணுமாம்

``எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க நல்ல சட்டைய வாங்கிட்டு பொத்தல் சட்டயத் தந்து எமாத்திடப் போறாங்க.

``அட யார்யா இவன் சும்மா தொண தொணத்துக்கிட்டு போய்யா அப்பால

நான் பின் வழியைத் தேடி நடந்தேன். பின்னால் பல வாசல்கள் தெரிந்தன. சற்று நேரம் அங்கே நின்றேன். கூட்டம் கூட்டமாய் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. குட்டி யானை ஒன்று அசைந்து வந்தது வெளியில். ராஜகுமரன் போல் ஒரு சிறுவன் அதன் மீது கம்பீரமாய் அமர்ந்திருந்தான். அவனைத் தொடர்ந்து அழகிய பெண்கள், பஞ்சத்தில் அடிப்ட்டாற்போல் எலும்பு துருத்தும் குழந்தைகள் என்று பின் வாசலும் ஜே ஜே என்றிருந்தது.

நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா?

நாங்கள் புது சட்டை வாங்கியாயிற்று.

``எங்கே.... பிடித்திருக்கிறதா?..

``எனக்குப் பிடித்திருக்கிறது. பழைய சட்டையில் நிறைய குறைகள் இருந்தன. இறுக்கிப் பிடித்துக்கொண்டு மூச்சே விட முடியாது. இந்த தையல்காரர் எமகாதகன்தான். நிமிடத்தில் கச்சிதமாய் ஒரு சட்டை தைத்துக் கொடுத்து விட்டார். ஆனால் அந்த நாடாவால் இழுப்பதுதான் பிடிக்கவில்லை. பயமாயிருக்கிறது. கொஞ்சம் அன்பாக அழைத்துச் சென்றால் என்னவாம்.

``இலவசமாய் தருகிறார் அல்லவா அதான் அந்த திமிர்.

``எனக்கும் என் சட்டை பிடித்திருக்கிறது. பழைய சட்டை மிகவும் நைந்திருந்தது இந்தப் புது சட்டை என்னை எப்படி இளமையாய் காட்டுகிறது பார்.

என்னோடு வந்த என் தாத்தாவைக் காணவில்லையே ஒரு பெண் பெரிதாய் அழுததும் பதறினேன் உதவியாளனிடம் ஓடிச்சென்று கேட்டேன்

``அவருக்கு சட்டை கிடையாது

``எங்கே அவர்?

நிர்வாணமாய் நிற்கிறார். வெளியில் வர மாட்டார்.

``அதெப்படி இத்தனை பேரை வெளியில் அனுப்பிவிட்டு அவரை மட்டும் எப்படி நிர்வாணமாய் நிற்க வைப்பீர்கள்? இது சரியாய்த் தெரியவில்லையே

``அது அப்படித்தான் இங்கு யாரும் கேள்வி கேட்கக் கூடாது புரிந்ததா?

``என்ன சர்வாதிகாரம் இது? நீங்கள் பாட்டுக்கு ஒரு ஆளை காணாமலடித்து விடுவீர்கள். நாங்கள் கேளிவியும் கேட்கக் கூடாது என்கிறீர்கள். இது அக்கிரமம்

அவன் பதில் சொல்லாது நகர்ந்தான்.

``நீ கவலைப் படாதே பெண்ணே. நான் உள்ளே சென்று உன் தாத்தாவை அழைத்து வருகிறேன்

நான் அவனை அழைத்தேன். ``இந்த வரிசையில் எங்கு நான் நிற்பது?“

``ஏற்கனவே நீ வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறாய். உன் நேரம் வரும் போது உள்ளே வா

நான் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். இத்தனை பழைய சட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இந்த தையல்காரர்? இவர் எலோருக்கும் நன்மை செய்கிறாரா? அல்லது ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரா?

``இரண்டும் இல்லை. எனக்கு சொல்லப் பட்ட பணியைச் செய்கிறேன்.

தையல்காரர் அளவு நாடாவால் என்னை உள்ளே இழுத்தார்.

``யோவ் யோவ் பார்த்து பயத்தில் நான் பதறினேன். கொஞ்சம் மூத்திரம் வந்து விட்டது.

உள்ளே வெளிச்சமாயிருந்தது. அங்கே கோடிக்கணக்கில் புது சட்டைகள் குவித்து வைக்கப் பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு அங்கே விடை கிடைத்தன. பல புதிர்கள் அவிழ்ந்தன.

``சட்டையைக் கழற்று

நான் கழற்றினேன். புது சட்டை தருவதற்காக காத்திருந்தேன்.

``அப்படி போய் நில்

``என் புது சட்டை எங்கே?

``இல்லை

அவன் அடுத்த ஆளை உள்ளே இழுத்தான்.

என்னை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

நான் நிர்வாணமாய் நின்றேன். அடுத்த ஆள் புது சட்டையோடு வெளியே சென்றதைப பார்த்துக் கொண்டிருந்தேன்.

``நீ கொடுத்து வைத்தவன். இனி உனக்கு வரிசை கிடையாது

எனக்குப் புரிந்தது, நானறிந்த ரகசியங்களை வெளியில் சொல்ல எனக்கு அனுமதியில்லை.

Saturday, February 18, 2012

விருது வாங்கலையோ விருது.!


நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன். இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதாத கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன். என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.


இனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.

இசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)

நிஜ மழையும் பிடிக்கும். கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம் வேறென்ன சுகம் வேண்டும்?

குழந்தைகள். இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான் இப்போது என் சொர்க்கம்.

நல்ல திரைப் படங்கள் - மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம் "Pursuit of Happiness"

நட்பு - நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு. நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள். என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும். என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை. என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல் அவசியம் என எண்ணுபவள்.


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இதுவும் ஒரு சந்தோஷம்தான். காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.

நான் விருதளிக்கவிழைவது.


கோபி ராமமூர்த்தி. http://ramamoorthygopi.blogspot.in/2012/02/2.html





இவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது.
இருந்தாலும் நானும் அளிக்கிறேன்.

இந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுகள் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மீண்டும என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.