Monday, June 14, 2010

குறிஞ்சிப்பூக்கள்

பெண்கள் லாரி ஓட்டுவதிலிருந்து ரயில், விமானம் வரை ஓட்டத் துவங்கி விட்டார்கள். விண்வெளிப் பயணமும் தங்களால் முடியும் என்று நிரூபித்து விட்டார்கள், அப்படி சாதிக்கின்ற பெண்களின் சதவிகிதம் குறைவுதான். ஆனால் அவர்கள் பெண் இனத்தின் பிரதிநிகளாக இருந்துதான் சாதிக்கிறார்கள். அதே போல்தான் ராணுவப் பணியும். அதற்கு அசாத்திய மனவலிமையும் உடல் வலிமையையும், தியாக சிந்தனையும் தேசப் பற்றும் தேவை. ஆனால் அதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்? என் தோழி ஒருத்தி வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்தவள். கல்யாணமான சிலவருடங்களிலேயே அவளது கணவர் மாரடைப்பில் இறந்து விட்டார். அந்த மரணத்தை என் தோழி சந்தித்த விதத்தை ஒரு கதையாகவே எழுத உள்ளேன். (அவள் அனுமதியுடன்) கணவர் இறந்த போது பையனுக்கு ஏழு வயது. பெண்ணுக்கு ஆறு வயது. இரண்டு குழந்தைகளையும் தன்னந்தனியே வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டாள். அவளது பெண்ணுக்கு படிக்கிற காலத்திலிருந்தே ஒரு லட்சியம் இருந்தது. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று, அதற்கேற்ற வழிகளில் தன கவனத்தை செலுத்தினாள். அவள் லட்சியத்தில் அவள் வென்று விட்டாள். இன்று இந்திய ராணுவத்தில் அவள் சீனியர் கேப்டன் ஆக பெங்களூரில் பணியாற்றிக்கொண்டிருக்கிறாள். ஐந்து வருடப் பணிக் காலத்தில் லே, கேங்க்டக் உட்பட மைனஸ் டிகிரியிலும் பணியாற்றி நம் நாட்டின் பாதுகாப்புக்கான தன் பங்கை அளித்துக் கொண்டிருக்கிறாள், எதற்காக இதை எழுதுகிறேன் என்றால், நல்ல படிப்பு, அழகு திறமை, தைரியம் உயர்ந்த பதவி இவை அனைத்தும் இருக்கின்ற தன் மகளுக்குத் திருமணம் செய்து விட என்தோழி வரன் தேடிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் ஒரே ஒரு நிபந்தனையுடன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறாள். ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரைத்தான் மணப்பேன், என்பதுதான் அவளது நிபந்தனை. என் தோழியும் அப்படியே வரன் பார்த்தாள். இரண்டு மூன்று வரன் வந்தது. ஒரு வீடு எடுத்த எடுப்பில் பெண் வேலைக்குப் போகக்கூடாது என்றது. இன்னொரு குடும்பம் பெண்களுக்கு ராணுவப்பணி உகந்ததில்லை என்று இலவச அறிவுரை வழங்கியது. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பெருமைப்பட வேண்டிய ஒரு பணியை மிக சந்தோஷமாக அந்தப் பெண் செய்து கொண்டிருக்கும்போது, அது ஆண்களுக்குரிய வேலை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ராணுவத்தில் பணியாற்றுகிற சிலரே இதைச் சொல்வதுதான் ஆச்சர்யமாக உள்ளது. திருமணம் என்று வருகிற போது அவளது ராணுவப் பணியை அங்கீகரிக்க அவர்களால் முடியவில்லை. சாதாரண வேலைகளைச் செய்ய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சாதிப்பவர்கள் குறிஞ்சிப் பூக்கள். குறிஞ்சிப்பூவின் மகத்துவம் தெரிந்த ஒருவன் நிச்சயம் இருப்பான். அந்த கொடுத்து வைத்தவன் இன்னும் கண்ணில் படவில்லை. ஒருவேளை அவன் இந்த வலைப்பூவைப் படித்து விட்டு மறு மொழி கொடுக்கக் கூடும். என் தோழியின் வீட்டில் மேள சப்தம் கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என எனக்குள் இருக்கும் இறைமை கூறுகிறது. நல்லது நடக்க நீங்களும் வாழ்த்துங்கள். வாழ்த்துக்கள் என்றும் வீண் போவதில்லை.

Saturday, June 12, 2010

மனித நேயம் குறைகிறதா?

சென்ற வாரம் கடற்கரை சாலையில் கண்ட ஒரு காட்சி. விவேகானந்தர் இல்லம் அருகே நான் சென்ற பஸ் திடீரென   நின்றது.  முன்னால் ஒரு பஸ் நின்றிருக்க அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் திமு திமுவென எங்கள் பஸ்ஸில் ஏறினார்கள். ஜன்னலுக்கு வெளியே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. சுமார் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் வலது கரத்திலிருந்து ரத்தம் ஆறாகப் பெருக நின்றிருந்தார். அவரது பைக் கீழே விழுந்து கிடந்தது. முன்னால் சென்ற
 பஸ் மோதி விபத்து நிகழ்ந்திருந்தது.  

அடிபட்ட மனிதர் இடது கையால் வலது கையை பிடித்தபடி  பரிதாபமாக நின்றிருக்க அவருக்கு முதலுதவி அளிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தாற்போல் தெரியவில்லை. இதில் என்ன கொடுமை என்றால் அவர் கீழே விழுந்த சமயத்தில் அவரது மொபைல் போன் சாலையில் விழுந்திருக்கிறது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவன் அதை எடுத்துக்கொண்டு நழுவியிருக்கிறான். யாருக்கும் தகவல்  கூட சொல்ல முடியாத நிலையில் அடிபட்டவர் நின்றிருந்த காட்சி இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. 

அதற்குள் எங்கள் பஸ் நகர்ந்து விட்டது.  போலீஸ் வந்து அவருக்கு உதவியதா என்று தெரியவில்லை. அந்த மனிதர் என்ன வேலையாகப் போய்க்கொண்டிருந்தார்,  அந்த மனிதர் இப்போது எப்படி இருக்கிறார்? ஒன்றும் தெரியவில்லை.  மனித நேயம் குறைந்து கொண்டு வருகிறது என்பது வருத்தமான உண்மை. இல்லாவிட்டால் அந்த மனிதன் அவரது செல் போனைத் தூக்கிக் கொண்டு போவானா?   அன்று முழுக்க அடிபட்டவரையும் அவரது குடும்பத்தையும் பற்றிய நினைப்பு நீங்கவில்லை. யார் மீது தவறு? சாலை விபத்துகள் என்று குறையும்?