Tuesday, April 20, 2010

தனிமையும் இனிமையும்

        கொஞ்சம் தனிமையும், நல்ல புத்தகங்களும்  கொடுக்கின்ற வாசிப்பு சுகத்திற்கு ஈடு வேறு எதுவுமில்லை என்று அடித்துச் சொல்வேன். பொதுவாக அந்த மூன்று நாட்கள் வரும்போது  முகம் சுழிப்பதற்கு பதில்  நான் முகம் மலர்ந்திருக்கிறேன். தனிமையாய் ஒரு இடம், (வாசல் ரேழியில் மறைப்பு கட்டி விட்டால் தனிமைதானே?)  எந்த வீட்டு வேலையும் செய்ய வேண்டாம். வேளா வேளைக்கு சூடான பானமும், சிற்றுண்டியும், சுடச் சுடச் சாப்பாடும்  கொரிப்பதற்கு பட்சணங்களும் டாணென்று என் இருப்பிடத்திற்கு வந்து விடும்.  நாள் முழுவதும் படித்துக் கொண்டிருந்தாலும் யாரும் திட்ட மாட்டார்கள்.  அதுவும் அனைவரும் பரபரப்பாக இயங்க ஆரம்பிக்கும் விடியற்காலத்தில், நான் மட்டும் கடல்புறாவில் பயணம் செய்து கொண்டிருப்பேன். மால்டோவா குடித்தபடி, தோசை சாப்பிட்டபடி உணவு உண்டபடி என்று நாள் முழுக்க புத்தகம் படித்த சுகம் இருக்கிறதே! அது ஒரு அற்புதமான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகங்கள் இன்பம் என்றால் புத்தகம் வாசித்தபடி சாப்பிடுவது பேரின்பம்.  இன்று வரை வாசித்தபடி  சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நல்ல உணவு  உடலுக்கு ஆரோக்கியம்.  நல்ல புத்தகங்கள் உள்ளத்திற்கு ஆரோக்கியம்.  காலமும் கடமைகளும்  இன்று   என் வாசிப்பு நேரத்தைக் குறைத்திருந்தாலும் புத்தகங்களோடான என் காதல் குறையவில்லை.
            அம்புலி மாமாவிற்குப் பிறகு நான் படித்த முதல் தொடர்கதை முழு நிலா எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அதே நேரம், நான் வாசித்த முதல் சிறுகதை எதுவென நினைவில்லை.  நான் பார்த்த முதல் சினிமா நினைவிருக்கிறது. எனக்கு ஏழு அல்லது எட்டு வயசிருக்கும் . என் அத்தையோடு வள்ளியூரில் ஒரு கொட்டகையில் பெஞ்ச் டிக்கெட்டில் பார்த்த படம் தூக்குத் தூக்கி. மலங்க மலங்க படம் பார்த்ததும், பாதியில் தூங்கிப் போனதும் நன்கு நினைவிருக்கிறது.
             நான் படித்த முதல் சிறுகதைதான் நினைவில்  இல்லையே தவிர என்  நினைவில் நிற்கும் சிறுகதைகள் ஏராளம். தி. ஜா. வின் கண்டாமணியும், சண்பகப் பூவும்,  லா.சா.ரா.வின் கிண்ணங்களும்,  புதுமைப்பித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையாரும்,  விநாயகச் சதுர்த்தியும், பாலகுமாரனின் டம்ப்ளரும்,    சுஜாதாவின் சிறுகதைகளும் என்னைப் பல நாள் தூங்க விடாமல் யோசிக்க வைத்திருக்கிறது.  சிறுகதைகளின் மீதான என் காதல் அளவிடமுடியாதது. என்றும் அழியாதது. சுஜாதாவிடமிருந்துதான் சிறுகதை இலக்கணத்தை (ஏகலைவியாக) நான் அறிந்துகொண்டேன். நல்ல  சிறுகதைகள்  ஒவ்வொன்றும்    சின்ன விதைக்குள் உயிர்த்திருக்கும் மாபெரும் விருட்சங்கள்.

Thursday, April 15, 2010

நானும் என் வனமும்

இன்றைக்குப் போல் அன்றைக்கு புத்தகச் சுமையோ, கல்விச் சுமையோ அதிகமில்லை. விளையாடுவதற்கும் வாசிப்பதற்கும் வேண்டிய நேரமிருந்தது. பதினான்கிலிருந்து இருபத்திமூன்று வயது வரையான ஒன்பதாண்டுகாலம் என் வாசிப்பின் பொற்காலம். என் கதை ருசி மாறிக் கொண்டேயிருந்தது. ஒரு சமயம் சரித்திரக் கதைகளின் பின்னே பைத்தியமாய் அலைந்தேன். கல்கியும், சாண்டில்யனும் அகிலனும், என்னைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றார்கள். என் கனவுகள் முழுவதும் குளம்பொலியும் வாட்களின் உரசல்களும் காதலின் வண்ணங்களும் நிரம்பியிருந்தன. கண்ணாடியில் நான் யவன ராணியாகவும் வானதியாகவும், குந்தவையாகவும் சிவகாமியாகவும்
பார்த்திபன் மகளாகவும் இன்னும் ஏதேதோ இளவரசிகளாகவும் தெரிந்தேன்.
எழுத்துலகம் என்பது மிக மிக அழகான, அடர்த்தியான ஒரு ஆரண்யம். அந்த வனத்தில் பற்பல பிரும்மாக்கள் தங்கள் நினைவாக அதியற்புதமான விருட்சங்களை விளைவித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு அதிசய மூலிகை. அந்த விருட்சங்களின் பெயர்கள் எல்லாம் சக்தி வாய்ந்தவை. நான் எப்போதும் உச்சரிக்கும் மந்திரங்கள். முழு நிலா, முள்ளும் மலரும், கடல் புறா, யவன ராணி, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பாற்கடல், அலையோசை, பொன்விலங்கு, குறிஞ்சிமலர், சித்திரப்பாவை, சிவகாமியின் சபதம், துப்பறியும் சாம்பு, மிஸ் ஜானகி, தில்லானா மோகனாம்பாள், சிலநேரங்களில் சில மனிதர்கள், ஜய ஜய சங்கர , உன்னைப் போல் ஒருவன், அரக்கு மாளிகை, இத்யாதி இத்யாதி என்று நீண்டு கொண்டே போகும். என்னடா தி.ஜா. வை விட்டு விட்டாளே என்று தோன்றுகிறதா? இந்த மூலிகை வனத்தில் என் பங்குக்கு நானும் சில விதைகளைத் தூவியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணமே அவர்தானே! என் பதினெட்டாவது வயதில் எனது நூலகத்தில் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. பெயரே வித்யாசமாய் இருந்தது. எழுத்தாளரும் எனக்கு புதியவர். படித்துதான் பார்க்கலாமே என்று வீட்டிற்கு எடுத்து வந்தேன். அந்த எழுத்து என்னைப் புரட்டிப் போடப் போகிறதென்று எனக்கு அப்போது தெரியாது. அந்த எழுத்துக்களின் வீரியமும், கூர்மையும் எனக்குப் புதுமையாயிருந்தது. ஸ்தம்பிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. அந்த புத்தகம் "அம்மா வந்தாள்". அவரை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் எதோ ஒரு சக்தியும் புத்துணர்வும் எனக்குக் கிடைத்தது. அதுவும் ஒரு போதைதான். அவரது கதை வாசத்திற்கு இன்று வரை நான் அடிமை. எனக்குள் இன்னும் அந்த மோக முள் குத்திக் கொண்டேயிருக்கிறது. செம்பருத்தி வாசம் வீசிக்கொண்டிருக்கிறது. அந்த நளபாகம், வேறு எவராலும் சமைக்க முடியாத விருந்து. உயிர்த்தேன் இன்னும் என் தொண்டைக்குள் காந்திக்கொண்டிருக்கிறது. நானும் எழுத வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது அவரை வாசிக்கத் துவங்கிய பிறகுதான்.

Wednesday, April 14, 2010

கதை வாசனை

வாசிக்க கற்ற வயதில் என் அப்பா எனக்காக மாதா மாதம் வாங்கி கொடுத்த புத்தகம் 'அம்புலிமாமா'. அதை எனக்குமுன் யாராவது தொட்டுவிட்டால் எனக்கு கோபம் வரும். அந்த புத்தகத்தின் புது வாசனை போகும் முன்பு படித்து விட வேண்டும். எத்தனை ஊடகங்கள் வந்தாலும் ஒரு வாசகனுக்கும் புத்தகத்திற்கும் இடையில் உள்ள புரிதலும் சுகமும் உன்னதமானது. அம்புலிமாமாவிற்கு பிறகு நான் படித்த புத்தகங்கள் மூலமாகவே என் வளர்ச்சி தொடங்கியது.

அந்த காலத்தில் என் வீட்டில் விகடன், கலைமகள், அமுதசுரபி இவற்றிக்கு மட்டும்தான் அனுமதி. அம்புலிமாமாவைத் தாண்டி பதிமூன்று வயதில் நான் படித்த முதல் தொடர் விகடனில் உமா சந்திரனின் 'முழு நிலா'. அம்புலிமாமாவிற்க்கும் அதற்க்கும் இடையில்தான் எவ்வளவு இடைவெளி? பெரியவர்கள் வாசித்துக்கொன்ட்டிருந்த அந்த முழு நிலா எனக்குள் இன்று வரை தேயவேயில்லை. உப்பிலியின் ஆக்ருதியும், மலைப்பாம்பும், முருங்கைக்காய் சாம்பாரும், கீரைக்கடைசலும், அப்பள உருண்டைகளும், ஜகடை  தாத்தாவின் ஜகடை சத்தமும், அந்த மலை வாழ் மக்களின் தேனும், தினைமாவும், வாழ்வும் இன்னமும் எனக்குள் பிரம்மிப்பாய் பதிந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு முழு நிலாவை மீண்டும் படிக்க ஆசைப்பட்டப்போது எனக்கு அது எட்டாத நிலவாக இருந்தது. நான் ஏறி இறங்கிய எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை.

நாம் ஒன்றை தீவிரமாக நினைத்தோம் என்றால் அது நமக்கு எப்படியாவது யார் மூலமாவது கிடைக்கும். எனக்கும் முழு நிலா கிடைத்தது. எப்படி? என் மருமகன் மூலமாக. என் மருமகன் திரு சஞ்சய் பின்டோ மிக பிரபலமான ஆங்கில செய்தியாளர். அன்றைய காவல்த்துறை ஆணையர் திரு ஆர் நடராஜ் என் மருமகனுக்கு கொடுத்த பேட்டியை தொலைக்காட்சியில் கண்டதும் என் மருமகனிடம் நான் வைத்த கோரிக்கை முழு நிலாவை எப்படியாவது அவரிடமிருந்து ஒரு பிரதி வாங்கி தர வேண்டும் என்பததுதான். திரு நடராஜ் வேறு யாருமல்ல திரு உமா சந்திரனின் மகன்தான். என் கோரிக்கை உடனடியாக் நிறைவேற்றப்பட்டது.. முழு நிலா மீண்டும் என் கைகளில் தவழ்ந்தப்பொழுது நான் என் பதிமூன்றாம் பிராயத்திற்குச் சென்றுவிட்டேன். அந்த கதை வாசனைக்கு ஈடில்லை.